இஸ்தான்புல், :பாலியல் அத்துமீறல், பண மோசடி, உளவு பார்த்தல் உட்பட பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய துருக்கியைச் சேர்ந்த மத போதகருக்கு, 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்காசிய நாடான துருக்கியைச் சேர்ந்தவர் அத்னான் ஒக்தார், 66. மத போதகரான இவரது கருத்துகள் அந்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன.
இவர், தன் போதனைகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை, இஸ்லாம் மதத்துக்கு அதிக அளவில் மாற்றி வந்தார். இவர் மீது, பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.
துருக்கியில், ‘ஏ 9 டிவி’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை துவங்கி, அதன் வழியாக மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில், பல இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் தோன்றி, இவருடன் இணைந்து பங்கேற்பர்.
அத்னான் ஒக்தார் மீது, பாலியல் அத்துமீறல், பண மோசடி, ராணுவம் மற்றும் அரசுக்கு எதிராக உளவு பார்த்தல் உட்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த வழக்குகளில் இவருக்கு 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
ஆனால், அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் அவரது வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அப்போது, அத்னான் ஒக்தார் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேருக்கு, 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement