சென்னை: சென்னையில் மாணவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த ஆய்வு ஒன்றை நடத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் இன்று (நவ.17) தமிழக முதல்வரும், குழுமத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் முதல்வரின் ஆலோசனையை செயல்படுத்து விதமாக ஆய்வு ஒன்றை நடத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் படிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவி, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவி, மாணவிகள் இருசக்கர வாகனம், பொதுப் போக்குவரத்து அல்லது சைக்கிள் மூலம்தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று திரும்புகின்றனர். குறிப்பாக, காலை வேளையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் ஆய்வு ஒன்றை முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், “பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி இரண்டு வகையில் இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்துவது என்று இரண்டு வகையாக இதை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னையில் கல்வி நிலையங்களுக்கு செல்லும், மாணவ, மாணவிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்படும். இந்த ஆய்வை தொடர்ந்து ஒரு சில கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முன்னோட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்துப் பகுதிகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.