ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே புனல்வேலி கிராமத்தில் விசைத்தறி கூடங்களுக்குள் மழைநீர் புகுந்து நூல் மற்றும் துணிகள் நீரில் நனைந்ததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புனல்வேலி கிராமத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடுகளுக்கு அருகே சிறிய அளவில் விசைத்தறி கூடங்கள் மூலம் வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவற்றை தயாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக புனல்வேலி கிராமத்தில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கண்மாய் உபரி நீர் பிள்ளையார்கோயில் ஊரணிக்கு வருகிறது. இரு நாட்களுக்கு முன் ஊரணி நிரம்பியதால் தண்ணீர் செல்ல வழியின்றி ஊரணிபட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்துள்ளது. இரு நாட்களாக மழைநீர் வடியாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களுக்குள் தண்ணீர் புகுந்து அங்கிருந்த நூல்கண்டுகள், நெசவு செய்த துணிகள் நீரில் நனைந்து சேதமடைந்ததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரணியில் இருந்து உபரி நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.