அப்போ இப்போ – 8 : `கோவை சரளா எங்க நாடக ட்ரூப்பைச் சேர்ந்தவங்கதான்!' – கோவை அனுராதா

“கோவை சரளா எங்க ட்ரூப்பை சேர்ந்தவங்க என்பதில் எங்களுக்குப் பெருமை! ரொம்ப திறமையான பொண்ணு; எங்க ஸ்டேஜ் டிராமாவிலிருந்த பொண்ணு இன்னைக்கு சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்காங்கன்னு சொல்றப்ப அத்தனை சந்தோஷம். இப்பவரைக்கும் நாங்க எல்லாரும் தொடர்புல தான் இருக்கோம்!” என்றவாறு பேசத் தொடங்கினார் கோவை அனுராதா.

கோவை அனுராதா

`காஸ்ட்லி மாப்பிள்ளை’, ‘மாண்புமிகு மாமியார்’ போன்ற பல சீரியல்களையும், மேடை நாடகங்களையும் இயக்கியவர் நடிகராகவும் வலம் வந்த கலைமாமணி கோவை அனுராதா அவர்களை அப்போ இப்போ தொடருக்காக சந்தித்துப் பேசினோம். அவருக்கே உரித்தான கனீர் குரலுடனும் நையாண்டியுடனும் கலகலப்பாக நம்மிடையே பேசத் தொடங்கினார்.

` என்னோட பத்து வயசில இருந்தே நடிக்கிறேன். என்னைச் சுற்றி எப்பவும் பசங்க இருந்துட்டே இருப்பாங்க. நான் எந்தப் படத்துக்குப் போனாலும் அந்தப் படத்தை டிக்கெட்டே வாங்காம பிஜிஎம் உட்பட எல்லாமே நடிச்சுக் காட்டிடுவேன். எல்லா பசங்களும் இலவசமா படத்தைப் பார்த்திடுவாங்க. பாலும் பழமும், பாசமலர்னு பா வரிசை படங்கள் எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு எம்ஜிஆர், சிவாஜி ரெண்டு பேரும் உசுரு.

எம்ஜிஆர் படங்கள் எல்லாத்திலுமே எவ்வளவு நல்ல விஷயங்களை சமூகத்துக்கு சொல்லியிருக்கார். அவர் படங்கள் பார்க்கும்போது அவ்வளவு விஷயங்கள் புரியும். நாங்க ஸ்கூல் படிக்கும்போது சிவாஜி சாரும், எம்ஜிஆர் சாரும் இறந்த பிறகு நாம உயிரோடவே இருக்கக் கூடாதுன்னுலாம் பேசியிருக்கோம். அவங்களுக்குப் பின்னாடி சினிமாவே இல்லைன்னு எண்ணின காலம் அது!

கோவை அனுராதா

எம்ஜிஆர் சாரை நேரில் சந்திச்சிருக்கேன். அவரை நேரில் பார்த்த சமயம் கடவுளை நேர்ல பார்த்தா எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அப்படித்தான் இருந்தது.. சிவாஜி சார் மாதிரி யாராலும் நடிக்கவே முடியாது. அவருக்குப் பிறகு யாராவது அப்படிப்பட்ட நடிப்புத்திறன் உள்ளவங்க வந்தாங்களான்னு எனக்குத் தெரியல என்றவரிடம் நாடகங்கள் குறித்துக் கேட்டோம்.

“10 வயசிலேயே திண்ணை நாடகம் போட்டிருக்கேன். எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை வந்த சமயம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் பாலச்சந்தர் சாருடைய நாடகம் பார்த்தேன். நாமளும் இவரை மாதிரி நாடகம் போடணும்னு அப்பத்தான் ஆசை வந்துச்சு.

1965-ல் `எழுத்தாளர் ஏகாம்பரம்’னு ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகத்துக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

கோவை அனுராதா

அதுக்குப்பிறகு தான் கோயம்புத்தூரில் `நண்பர்கள் கலை பண்பாட்டுக் குழு’ன்னு ஆரம்பிச்சோம். கோயம்புத்தூர்ல இருந்து சென்னை வந்து நாடகம் போட்ட ட்ரூப்ல நாங்களும் உண்டு. எங்க நாடகக்குழு பற்றி எல்லா பத்திரிக்கையிலும் எழுதினாங்க. என் தம்பிங்க நடிக்க ஆர்வமா இருந்தாங்க.. நான் எழுத ஆர்வமா இருந்தேன். அப்படியே எதார்த்தமா ட்ரூப் அமைஞ்சிடுச்சு. என்னோட நாடகத்துல ஆபாசமா எழுத மாட்டேன். பெண்களை மட்டமா எழுத மாட்டேன்.

அப்படியெல்லாம் இல்லாம நகைச்சுவை கொண்டு வர்றது ரொம்பவே கஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா, நான் அப்படி எழுதி சிரிக்க வச்சிருக்கேன். என்னோட பலமே என் பாடிலாங்குவேஜ் தான். பாடிலாங்குவேஜ் மூலமா சுலபமா சிரிக்க வச்சிடுவேன். என்னோட எல்லா நாடகத்திலும் கருத்து நிச்சயமா இருக்கும். ஏன்னா எம்ஜிஆரை பார்த்து அவருடைய வழிகாட்டுதலின்படி வளர்ந்ததனால ரொம்ப கவனமா எழுதுவேன்.

எந்த பாலச்சந்தர் சாரைப் பார்த்து நாடகம் போட நினைச்சேனோ அந்த பாலச்சந்தர் சாரே ரெண்டு முறை என் நாடகத்தை பார்க்க வந்திருக்கார். விஐபியாகக் கூட கூப்பிடல அவரே அவர் மனைவியோட ஒருமுறையும், ஜெய்யுடன் ஒரு முறையும் வந்து என் நாடகம் பார்த்திருக்கிறார் என்றவர் ஜெமினி கணேசன் குறித்து பகிர்ந்து கொண்டார்.

கோவை அனுராதா

ஜெமினி சாருடைய படத்தை மண்ணை குமிச்சு உட்கார்ந்து திரையில் பார்த்திருக்கேன். அவரை வச்சு `மெதுபக்கோடா மேனேஜர்’னு ஒன்னு டைரக்ட் பண்ணினது அவ்வளவு சந்தோஷம். அவருடைய வீட்டுக்கு போயிருந்தப்ப அவரே எனக்கு லஸ்ஸி பண்ணிக் கொடுத்தார். அவரையும், ஜெய்யும் வச்சு ஒரு சீரியல் டைரக்ட் பண்றதா இருந்தது. அவர் வாழ்க்கையில் என்னவோ மாறிப் போகவும் அவரால டப்பிங் கூட அந்த சமயம் பேச முடியல. அதனால அந்தப் புராஜக்ட் பண்ண முடியாம போச்சு என்றவரிடம் `தென்றல்’ சீரியல் குறித்துக் கேட்டோம்.

தென்றல் சீரியல் எனக்கு கிடைச்ச கொடுப்பணை. டைரக்டர் குமரன் சீன்ல அங்கங்க என்னை பாட்டு பாட விட்டுடுவார். அதுல என்னோட காமெடி சீன் பலராலும் பாராட்டப்பட்டுச்சு. இப்ப அந்த சீரியலை ரீ டெலிகாஸ்ட் பண்றாங்க. அப்ப சீரியல் பார்க்கலாம் நேரமில்லை.. அதனால இப்ப பார்த்துட்டு இருக்கேன் என்றவரிடம் தொடர்ந்து நடிகராக உங்களை எதிர்பார்க்கலாமா எனக் கேட்டோம்.

கோவை அனுராதா

இப்பவும் மாசத்துக்கு ஒரு நாள் நாடகங்கள் பண்ணிட்டு இருக்கேன். சினிமாவில் 4, 5 நாள் ஷூட்டிங் இருந்தா அதுவும் சென்னையிலேயே இருந்தா பண்ணலாம். சீரியலை விட, புகழை விட, வருமானத்தை விட என் மனைவி எனக்கு ரொம்ப முக்கியம். அதனால வெளியூர் ஷூட்டிங்கிற்கு போகத் தயாராக இல்லை. இப்ப சினிமாவில் இளைஞர்களாகத்தான் இருக்காங்க.. அவங்களுக்கெல்லாம் நம்மளை தெரியுமான்னே தெரியாது. அவங்க சொல்ற மாதிரி நடிக்கணும். அதெல்லாம் நமக்கு செட்டாகாது. சீரியல்னா நமக்கு கெளரவம் கொடுக்கிற சீனாக இருக்கணும்.. நமக்குன்னு ஒரு பெயர் இருக்கு அதை கெடுத்துக்கக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருக்கேன் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.