சென்னை: “அரசு மருத்துவமனைகளில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல், முறையாக சரியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய நிலையை அரசு சுகாதாரத் துறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “டெல்டா மாவட்டங்களான சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பு வராத வகையில், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். அதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் விலை உயர்வைக் கண்டித்து அடுத்த வாரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விளையாட்டு வீராங்கனையின் மரணச் செய்தி, அரசு மருத்துவமனைகளின் உடைய தவறான சிகிச்சையை வெளிப்படுத்தியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல், முறையாக சரியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். சிகிச்சைகள் முறையாக அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய நிலையை அரசு சுகாதாரத் துறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.