ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் தீவிரவாதத்தை அழிக்கும் வரை ஓயமாட்டோம்: சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை வேரோடு அழிக்கும் வரை இந்தியா ஓயாது’ என்று டெல்லியில் நடந்த சர்வதேச தீவிரவாத ஒழிப்பு மாநாட்டில் பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்தார்.  தீவிரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கத்தில், தீவிரவாத நிதி தடுப்பு 3வது சர்வதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் இதில், 70 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
அரசியல் ரீதியான ஆதரவு, நிதியுதவிகளை வழங்குவதன் மூலமாக, தங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாக தீவிரவாதத்துக்கு உதவும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அமைப்புகள், நாடுகள், தனிநபர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கான அனைத்து வகையான வெளிப்படையான, மறைமுக ஆதரவுக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாத அமைப்புகள் பல்வேறு ஆதாரங்கள் மூலமாக பணம் பெறுவது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அதில் ஒன்று அரசின் ஆதரவாகும். சில நேரங்களில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்காக, தீவிரவாதத்துக்கு ஆதரவாக மறைமுக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

போர் இல்லாமல் இருப்பது அமைதி என்று சர்வதேச அமைப்புகள் நினைத்து விடக்கூடாது. மறைமுக போர்களும் ஆபத்தானவைதான். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது அபராதம் விதிக்கப்பட வேண்டும். தீவிரவாதத்தை ஆதரிக்கும் எவருக்கும் எந்த நாட்டிலும் ஆதரவு அளிக்கக் கூடாது. தீவிரவாதத்தை வேரோடு அகற்றும் வரை ஓயமாட்டோம். தீவிரவாதத்தின் நீண்ட கால தாக்கம், குறிப்பாக ஏழைகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது. திட்டமிட்ட குற்றங்களை தனித்தனியாக பார்க்கக் கூடாது. இந்த குழுக்கள் தீவிரவாதத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. துப்பாக்கி விற்பனை, கடத்தல் மூலமாக பெறப்படும் பணம், தீவிரவாதத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த குழுக்கள் தளவாடங்கள் மற்றும் தகவல் தொடர்புகளிலும் உதவுகின்றன. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறு மோடி பேசினார்.

எந்த மதத்துடனும் இணைக்க முடியாது
தீவிரவாத நிதி தடுப்பு மாநாட்டில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘தீவிரவாதம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிக கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால், தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது என்பது தீவிரவாதத்தைவிட மிகவும் ஆபத்தானது என நான் நம்புகின்றேன். ஏனென்றால், தீவிரவாதத்தின் வழிமுறைகள் இதுபோன்ற நிதியின் மூலமாக வளர்க்கப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தலை எந்த மதம், இனம் மற்றும் குழுவுடனும் இணைக்க முடியாது என்பதை இந்தியா அங்கீகரிக்கிறது. தீவிரவாதிகளை பாதுகாப்பது தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு சமமாகும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.