நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட தேவாலா பஜார் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொது கழிவறை ஒன்று பராமரிப்பு இல்லாமல் நீண்ட நாட்களாக இருந்தது. தினமும் பல்லாயிரம் மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வந்து செல்லும் இடம் என்பதால் பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிவறையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மத்திய அரசின் நவீன கழிவறை திட்டத்தின் கீழ் 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கழிவறையின் அனைத்தும் பணிகளும் முடிந்து தயாராக இருந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பதால் ஆர்வத்துடன் கழிவறையை காணச் சென்ற பொது மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஒரே அறையில் இரு கழிப்பிடங்கள் கொண்டு கழிவறை கட்டப்பட்டிருந்தது. மேலும் இரண்டு கழிப்பிடங்களுக்கு இடையே சிறிய அளவிலான சுவர் மட்டுமே அமைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதனை காணச் சென்ற சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
கழிவறையின் புனரமைப்பு பணி என்ற பெயரில் மத்திய அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நெல்லியாளம் நகராட்சி கழிவறையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு கோவை மாநகராட்சிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில் ஒரே அறைக்குள் இரு கழிவறைகள் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.