மகாராஷ்டிரா மாநிலம் எவட்மால் மாவட்டத்திலுள்ள பான்சி எனும் கிராமத்தில் கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் ஒரு மனதாக ஒரு முடிவெடுத்துள்ளனர். அதன்படி குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மொபைல் போன்கள் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. அதோடு, அதை மீறுவோருக்கு ரூ. 200 அபராதம் எனவும் கிராம சபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

“கோவிட் -19 ஊரடங்கு காலகட்டத்தில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்கள் கைகளிலும் மொபைல் போன்கள் அதிகமாகப் புழங்கியது. மொபைலில் கேம் விளையாடுவது மட்டுமின்றி, அவர்கள் வயதுக்குத் தகாத இணையதள பக்கங்களுக்கும் அடிமையாகிவிட்டனர். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது கடினம் தான். ஆனால், மொபைல் போன்கள் பயன்படுத்தும் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டால் ரூ. 200 அபராதமாக விதிக்கப்படும்”, என பான்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பேசப்பட்டது.
இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் மகாராஷ்டிரா மாநிலம் சங்க்லி எனும் கிராமத்தில் இதுபோன்ற முடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தைகள் படிப்பதில் கவனம் செலுத்தும் வகையிலும், பெரியவர்கள் குடும்பத்திலுள்ளவர்களுடன் உரையாடும் வகையிலும், தினமும் இரவு 7 மணிக்கு சைரன் ஒலிக்கப்படும். அதன்படி 7 மணி முதல் 8:30 மணிவரை தொலைக்காட்சிகளை அணைத்துவிட்டு, மொபைல் போன்களை ஓரங்கட்டிவிட்டு, குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும்.

இது குறித்து செய்தி நிறுவனமான PTI -யிடம் கிராம தலைவர் விஜய் மோஹிதே கூறுகையில், “முதலில் இந்த யோசனைக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. ஆஷா ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் இந்த யோசனைக்குத் துணை நின்றனர். அதோடு பெற்றோர்களும் பெரிய அளவில் வரவேற்பு தந்தனர்” என்று கூறியுள்ளார்.