புதுடெல்லி: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தது. அரசியல் அழுத்தம் காரணமாக சில நடைமுறைகளை தவிர்த்துவிட்டு இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
கோவாக்சின் அனுமதி தொடர்பாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான செய்தி தவறான தகவல். கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் எதிர்ப்பு திறன் குறித்த தரவுகளை நிபுணர் குழு ஆய்வு செய்தது. அதன் பிறகு மத்திய அரசு மற்றும் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணர் குழு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஆலோசனை செய்து கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க பரிந்துரை செய்தது.
பாரத் பயோடெக் நிறுவனம் தாக்கல் செய்த அறிவியல் தரவுகள் அடிப்படையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான 3-ம் கட்ட பரிசோதனைக்கு நிபுணர் குழு அனுமதி வழங்கியது. செய்திகளில் கூறப்பட்டது போல், கோவாக்சின் மருத்துவ பரிசோதனையில் அறிவியல்பூர்வமற்ற மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுவதெல்லாம், மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பில் தாக்கல் செய்த அறிக்கைக்கு பின் நிகழ்ந்தவை. பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் தாக்கல் செய்த அறிக்கையின் படியும் மற்றம் நிபுணர் குழுவின் திறன் மற்றும் பாதுகாப்பு தரவு மதிப்பீட்டின் படியும் மருத்துவ பரிசோதனையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நிபந்தனை கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதி நீக்கப்பட்டது.
கோவாக்சின் உட்பட கரோனா தடுப்பூசிகளுக்கான அங்கீகாரத்தை சிடிஎஸ்சிஓ நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் மட்டுமே தேசிய ஒழுங்குமுறை அமைப்பு வழங்கியது. இந்த நிபுணர்குழுவில் நுரையீரல், நோயெதிர்ப்பு, நுண்ணுயிரியல், மருந்தியல், குழந்தை மருத்துவ துறை நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.