பனாஜி: “சர்வதேச புதுமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி-2022” தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரத்தில் நேற்று தொடங்கியது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 238 புத்தாக்க நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. மேலும், 104 புதிய கண்டுபிடிப்புகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, போலந்து, ரஷியா, ஈரான், சவூதி அரேபியா, ஸ்பெயின், தாய்லாந்து, மக்காவ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 37 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று தங்களது புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து கோவா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரல் கூறியது:
மாநில அரசு புத்தாக்க நடவடிக்கைகளுக்கு என்றுமே துணை நின்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, 2022-ம் ஆண்டு முதல் 100 இந்திய கண்டுபிடிப்புகள் புத்தகம் இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளையதலைமுறையினர் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. அடுத்த ஆண்டு நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம்பெறும் 50 சதவீத கண்டுபிடிப்புகள் கோவா மாநிலத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.