சென்னை : வியாசர்பாடி அடுத்த கன்னிகாபுரத்தை சேர்ந்த விக்னேஷ், அயனாவரம், பக்தவச்சலம் தெருவில் மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார்.
விக்னேஷ் எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மனைவி தேவப்பிரியா எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவம் நடந்த இன்று காலை மனைவியை அலுவலகத்தில் விட்டு விட்டு, விக்னேஷ் அவரின் நிறுவனத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அவரின் கீழ் பணிபுரியும் சந்தோஷ் என்ற ஊழியர், விக்னேஷை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விக்னேஷ் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கொலையாளி சந்தோஷை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், பனி நேரத்தில் வெளியே அனுமதிக்கேட்டு தராத ஆத்திரத்தில் விக்னேஷை வெட்டி படுகொலை செய்ததாக சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலைக்கு சென்ற கணவன் வெட்டி கொலை செய்யப்பட்டதை அறிந்த விக்னேஷின் மனைவி கை குழந்தையுடன் கத்தி கதறி அழுதது பொதுமக்களையும், போலீசாரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கொலை நடந்த இடத்திலிருந்து 50 அடி தூரத்தில் தான் எழும்பூர் காவல் நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.