தமிழக எல்லைகளை மீட்குமா திமுக அரசு?- அதிமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழக எல்லைப் பகுதிகளுக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கவலை தெரிவி்த்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரள அரசின் டிஜிட்டல் மறு நில அளவீடு சர்வேயால் தமிழக நிலப்பரப்புக்கு ஆபத்து என்று ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சரை சந்தித்து இரண்டு முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது தான் நம்முடைய விவசாயிகள் இடத்திலே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து அந்த மாநிலம் முழுவதும் டிஜிட்டல் முறையில் மறு நில அளவீட்டை செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, தமிழக எல்லையில் உள்ள ஆயிரம் சதுர கிலோமீட்டர் வரையிலான பரப்பை கேரளாவிடம் இழக்கும் அபாயம் ஏற்படும் என்று பெரியார் விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தினர் கவலை தெரிவித்திருந்தனர்.

இந்த விஷயத்கில் தமிழக அரசின் கவனகுறைவால், நமது மாநிலத்தின் எல்லை பகுதிகளை கேரளாவுக்கு விட்டுக் கொடுத்து விடுவோமோ என்கிற அச்சம் பெரியார் பாசன, வைகை பாசன விவசாயிகள் மத்தியிலே ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இந்த டிஜிட்டல் மறு நிலவை அளவீட்டால் தமிழகத்தை ஒட்டி இருக்கும் கேரளத்தின் ஏழு மாவட்டத்தில் உள்ள 15 தாலுகாக்களில் வசிக்கும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேனி மாவட்ட விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

1956 இல் ழிவாரி மாநிலங்கள் பிரிப்பின்போது சல் அலி தலைமையிலான கமிட்டி கொடுத்த வரையறையின் அடிப்படையில் தமிழக-கேரள எல்லைகள் பிரிக்கப்படவில்லை. தமிழக – கேரள எல்லையில் உள்ள 822 கிலோமீட்டர் அளவிலான எல்லை இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றும் நம்முடைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக விவசாயிகள் கூறுவது போல் முதலில் ஜமீன் பட்டா அடிப்படையிலும், 1956 மொழிவாரி பிரிவினை கமிட்டி கொடுத்த நில வரைவியல் அடிப்படையிலும், முதலில் அளவீடு செய்து தமிழக – கேரள எல்லையை முழுமைப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் மறு அளவீடு முழுவிபரம் முழுமை பெறும். இல்லாவிட்டால் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய நிலப்பரப்புகளை தமிழகம் இழப்பதற்கான ஒரு அபாயகரமான சூழ்நிலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை, தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என தெரியவில்லை.

அது மட்டுமின்றி மத்திய பார்வையாளர்கள் இல்லாமல் டிஜிட்டல் மறு நில அளவீட்டை கேரள அரசு நடத்துவது மிகப்பெரிய பிரச்சனைக்கு வழி வைக்கும். கேரளாவின் தேவிகுளம், சுல்தான், பத்தேரி, சித்தூர், ஆலத்தூர், புனலூர், நையாற்றில் கரை உள்ளிட்ட 15 தாலுகாக்களில் மத்திய பார்வையாளர்களைக் கொண்டு நிலங்களை மறு அளவீடு செய்ய திமுக அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா?

நான் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்றதொரு சர்ச்சை ஏற்பட்டது. அப்போது முதல்வராக இருந்த எடப்பாடியார், விவசாயிகளுடைய அச்சத்தை போக்க நாம் முறையாக எல்லையை வரையறை செய்ய வேண்டும் எங்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கையை எடுக்கப்பட்டது.

இந்த பிரச்சனையை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்த்தால், டிஜிட்டல் ரீ சர்வேயில் ஒருவேளை கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களும் கேரளா எல்லைக்குள் வருகிறது என்று சொல்லி அங்கு ஒரு போர்டு வைத்தாலும் வைப்பார்கள். நேரடியாக தேனி மாவட்டத்திற்கும், மதுரை மாவட்டத்திற்கும் வந்து கூட அவர்கள் போர்டு வைத்தாலும் வைப்பார்கள் என்று விவசாயிகள் பேசிக் கொள்கிறார்கள்.

தேவாரம் கிராமத்தை உள்ளடக்கிய ஆனைக்கல்லுக்கும், பாப்பம்பாறைக்கும் இடையே ஐம்பது ஏக்கர் பரப்பளவு தங்களுக்கு சொந்தமானது என்று கேரளா போர்டு வைத்திருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.