சென்னை: “இந்த 15 மாத காலத்தில் தமிழகத்தில் ஏராளமான புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாடுகள், மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். அந்த வகையில், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் தென்னிந்திய வேலை அளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா இன்று (நவ.18) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “1920 என்பது மிகமிக முக்கியமான ஆண்டு. திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக் கட்சியானது முதன்முதலாக ஆட்சியமைத்த ஆண்டு அது. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது.
இத்தகைய நீதிக் கட்சியைத் தொடங்கிய வெள்ளுடை வேந்தர்தான், 1909-ம் ஆண்டு சென்னையில் வர்த்தகப்பிரிவு தலைவர்களை அழைத்து பேசி, முதன்முதலாக தென்னிந்திய வர்த்தகர் கழகத்தை உருவாக்கியவர். வெறுமனே அதன் தலைமைப் பொறுப்பில் மட்டும் இல்லாமல், சவுத் இந்தியன் டிரேட் ஜர்னல் என்ற இதழையும் வெளியிட்டு வந்தார். சமூக நீதியின் வளர்ச்சியில் மட்டுமல்ல, சென்னை நகரின் தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம் என்பதால்தான், இந்த ஆட்சியின் இலக்காக அனைத்து துறைகளின் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாக கொண்டுள்ளோம் என்றால் அதற்கு அரசியல், சமூகவியல் மட்டுமல்ல, பொருளாதாரமும், தொழில் வளர்ச்சியையும் உள்ளடக்கி இருக்கிறது.
தொழில் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்து தங்கள் தொழில்கள் சிறந்து விளங்க உருவானதுதான், தென்னிந்திய வேலை அளிப்போர் சங்கம். தற்போது 10 லட்சத்துக்கு அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது இந்த கூட்டமைப்பு. சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவிவருவது பாராட்டுக்குரியது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த 15 மாத காலத்தில் தமிழகத்தில் ஏராளமான புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் நிறுவனங்களைத் தொடங்குகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகின்றனர். அந்த வகையில், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.
அமைப்புச் சார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி, இத்துறையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் மூலமாக பல திட்டங்கள், கல்வி, திருமணம், இறப்பு இழப்பீட்டுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தொழில்துறை தொழிலாளர்களுக்கு இடையே சுமுக உறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் பேசினார்.