கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சுழல் வெப் சீரிஸ் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றி பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து கதிர் நடிப்பில் உருவாகியிருக்கும் யூகி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, நட்டி நடராஜன், நரைன், ஆத்மியா ராஜன், பிரதாப் போத்தன், முனிஸ் காந்த் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் கர்ப்பமாக இருக்கும் கயல் ஆனந்தி ஒரு காரில் ஏறி செல்கிறார். அவரை தேடும் முயற்சியில் ஒருபுறம் நரைன் மற்றும் கதிரும் மருபுறம் நட்டியும் தேடி வருகின்றனர். இறுதியில் கயல் ஆனந்தி கிடைத்தாரா? அவருக்கு என்ன ஆனது? யார் அவர்? என்பதே யூகி படத்தின் ஒன்லைன். மிகவும் சிக்கலான திரைக்கதை கொண்ட இந்த கதையை தனது முதல் படமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள். இவ்வளவு நடிகர் பட்டாளங்களை வைத்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை எடுத்து உள்ளார்.
ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் யூகி படத்தில் உள்ளது. முதல் பாதி முழுக்க ஆனந்திக்கு என்ன ஆனது என்ற பரபரப்பு திரையைத் தாண்டி நமக்கும் ஏற்படுகிறது. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்வெஸ்டிகேஷன் காட்சிகளும் வழக்கமான படங்களில் வருவது போல் இல்லாமல் கொஞ்சம் தனித்துவமாகவே உள்ளது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் யாருடன் நாம் பயணிப்பது என்ற குழப்பம் முதல் பாதி வரையில் நீள்கிறது.
இரண்டு மணி நேரம் 11 நிமிடங்கள் மட்டுமே ஒடும் இந்தப் படத்தை நச்சென்று எடிட் செய்துள்ளார் எடிட்டர் ஜோமின். இரண்டாம் பாதியில் ஒவ்வொரு விஸ்டம் ரிவில் ஆகும் இடம் நன்றாக இருந்தது. இவர் தான் குற்றவாளி என யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை இருந்தது சிறப்பு. இருப்பினும் இன்னும் சற்று விளக்கமாக திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம். திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு யூகி பெஸ்ட் சாய்ஸ்.