2021 vs 2022 – சென்னையின் 172 சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பெய்து வந்தது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை சென்னையில் 652 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மிமீ, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 503 மிமீ, திருவள்ளூர் மாவட்டத்தில் 457.8 மிமீ மழை பதிவாகி உள்ளது.

இந்த மழை காரணமாக, சென்னையில் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கமில்லை. அதேநேரம், உட்புற சாலைகள் மற்றும் பட்டாளம், புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டு பெய்த மழையால், சென்னையில் 200-க்கும் மேற்பட்ட சாலைகளில், ஐந்து நாட்களுக்கு மேல் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றில் 172 சாலைகளில், தற்போது பெய்த மழையால் மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் கடந்த ஆண்டு 5 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை. இதற்கு, சிங்காரச் சென்னை 2.0 திட்டம், வெள்ள நிவாரண நிதி, மூலதன நிதி ஆகிய நிதி ஆதாரங்களின் அடிப்படையில், சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் கட்டமைப்பை புதிதாக அமைத்தது முக்கியக் காரணம்.

குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு, அமைச்சர்கள், நகராட்சி நிர்வாக செயலர் உள்ளிட்டோர், கடந்தாண்டு மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த ஆண்டு மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அவ்வப்போது ஆய்வு செய்து, பணிகளை விரைவுப்படுத்தினர். எனவே, முன்னுரிமை அடிப்படையில், இந்த பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆங்காங்கே தேங்கிய மழைநீரும் உடனடியாக அகற்றப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.