Mission Prarambh: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் Vikram-S… புது வரலாறு படைக்கும் ஸ்கைரூட்!

விண்வெளி தொடர்பான ஆய்வுகளை செயற்கைக்கோள்கள் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இது தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள்களையும் அவ்வப்போது விண்ணில் செலுத்தி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் விண்வெளி துறையில் தனியார் துறையின் பங்களிப்பிற்கு கடந்த 2020ஆம் ஆண்டு அச்சாரம் போடப்பட்டது.

இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் விண்வெளி ஆய்வுகளில் ஆர்வம் காட்டத் தொடங்கின. அதில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமும் ஒன்று. இஸ்ரோவில் முன்னாள் விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கினர்.

இந்நிறுவனத்திற்கு ஏவுதளம், கண்காணிப்பு, தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு ஆகிய வசதிகளை வழங்க இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த தனியார் விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த ராக்கெட் இன்று (நவம்பர் 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முதல் இந்திய தனியார் விண்வெளி நிறுவனம் என்ற பெருமையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் பெறவுள்ளது. 2.5 கிலோ எடையுள்ள பன் – சாட் என்ற செயற்கைக்கோளை விக்ரம்-எஸ் ராக்கெட் இன்றைய தினம் சுமந்து செல்கிறது. இந்த செயற்கைக்கோள் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்டது.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ராக்கெட்டிற்கு ’விக்ரம்-எஸ்’ பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திட்டத்திற்கு ’பிரரம்ப்’ என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயர் வைத்துள்ளது.

இதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். வணிக நோக்கத்திற்கு விக்ரம்-எஸ் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் மூன்று சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்று தாழ்வான புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்த உதவுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.