இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 3.2லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1.31 லட்சம் பேர் புறக்கணிப்பு…

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழகஅரசு பணிகளில் காலியாக உள்ள  92 பணியிடங்களுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இன்று தேர்வை எழுத பாதி அளவிலான நபர்களே வந்திருந்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு. அரசு பணியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 இடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 இடங்களுக்கும், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 13 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 7 இடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் தேர்வு நடத்தப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களிலும், சென்னையில்,  149 இடங்களிலும் இன்று நடைபெற்றது. இன்று காலை 9:30 மணி தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடந்தது. தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த தேர்வுக்கு 3,22,416 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால்,  1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.