காவல் துறைக்கு சுதந்திரம் கொடுங்கள் – அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை எழும்பூர் காவல் நிலைய வாசலிலேயே, விக்கி என்ற விக்னேஷ் என்ற வாலிபர் மர்மநபர்களால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுபாதக செயலை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் கொலையை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சாலையில் செல்லும் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலையில், இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது வெட்கக்கேடானதாகும்.

கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் எழும்பூர் காவல் நிலையம் எதிரே ஒரு கொலை, மாடம்பாக்கம் ஊராட்சித் தலைவர் படுகொலை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அரசு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல, மத்திய உளவுத்துறை அவ்வப்போது வழங்கும் முன்னெச்சரிக்கைகளையும் காற்றில் பறக்க விடுகிறது. இதில் ஒன்றுதான் தீபாவளிக்கு முன் கோவையில் நடந்த கார்-சிலிண்டர் குண்டு வெடிப்பு நிகழ்வு. நேற்று எழும்பூர் காவல் நிலையம் முன் நடந்த படுகொலைக்கு காவல் துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முழுபொறுப்பும் ஏற்க வேண்டும். 

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை தடையில்லாமல் நடைபெறுகிறது. இதே காவல் துறைதான் எங்களுடைய ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து, இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கில் முதன்மையான மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றது. எனவே, நான் ஏற்கனவே பலமுறை சட்டமன்றத்திலும், எனது அறிக்கையின் வாயிலாகவும், பேட்டிகளின் மூலமும் குறிப்பிட்டவாறு, இனியாவது இந்த தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.