கூட்டுறவுத்துறை செயல்பாடு எப்படி?; அமைச்சர்கள் ஐ.பெரியசாமி Vs பிடிஆர் இடையே கருத்து மோதல்?

கூட்டுறவுத்துறை வளர்ச்சியில் நிதியமைச்சராக தனக்கு திருப்தியில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவில் கூட்டறவுத்துறை செயல்பாடுகள் திருப்தியாக இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை வார விழாவின் மாநில அளவிலான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசியிருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, “தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை எப்போதும் இல்லாத அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறையில் விரைவில் 6500 பேர் நியமனம் செய்யப்பட இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
image
முன்னதாக மதுரையில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பேசியிருந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கூட்டுறவுத்துறையின் செயல்பாடு கொள்கை மற்றும் வரலாற்று ரீதியாக சிறப்பாக உள்ளது. என்றாலும், தற்போதைய செயல்பாட்டு திறன் மற்றும் தகவல்தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். கூட்டுறவுத்துறையில் தினமும் ரெய்டுகள் நடத்தப்பட்டு கடத்தல்கள் அதிகரிப்பதாக பல செய்திகள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் தான் பல பிழைகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன்கடைகளில் பொருட்கள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. உலகளாவிய அளவில் நமது கூட்டுறவுத்துறை செயல்படும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும். நிதியமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகள் எனக்கு திருப்திகரமாக இல்லை” என்று வேதனை தெரிவித்தார்.
image
கூட்டுறவுத்துறை வளர்ச்சி குறித்து மீண்டும் பேசியிருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவுத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு செயல்பாடுகள் சரியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடத்தல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 13ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 4000 ரூபாய் 99.9% அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 2.13 லட்சம் கார்டுதாரர்களுக்கு பணம் கொடுத்துள்ளோம். யாரும் பணம் கிடைக்கவில்லை என கூறவில்லை. தரமான அரிசி வழங்கப்பட்டு, அனைத்து பொருட்களும் முறையாக வழங்கப்பட்டுவருகிறது. நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம், கடத்தல் என யார் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
மேலும், அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் அந்த இடங்களில் புதிய கடைகள் அமைக்க ஏற்பாடு செய்து தரப்படும். 10 வீடுகல் இருந்தாலும் அங்கு சென்று பொருட்கள் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே பொருட்கள் வழங்குவதில் தமிழகம் தான் முதல் நிலையில் இருக்கின்றது. கடந்த 1 1/2 ஆண்டுகள் போல வேறு எப்போதும் பணிகள் நடந்ததில்லை. கழிப்பிட வசதியுடன் ரேஷன் கடைகள் கட்டப்பட்டு வருகின்றது. கண்விழித்திரை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை சென்னை, அரியலூர் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
image
முக்கியமாக கூட்டுறவு துறையில் விரைவில் 6500 பேர் பணி நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். ”மக்கள் யாரும் குறை சொல்லவில்லை, மக்கள் மிக திருப்தியாக இருக்கின்றனர்” என்று பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.