
ஈராக்கில் எரிவாயு கசிந்து வெடித்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாப் கலைஞர் ஆண்டி வார்ஹோல் பெயின்ட் செய்த காரின் மீது காலநிலை மாற்றப் போராளிகள் மாவு வீசி சேதப்படுத்தினர். இவர்கள் மூன்றாவது முறையாக கலை கண்காட்சியை குறிவைத்து இவ்வாறு செய்திருக்கின்றனர்.

உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தை ஹங்கேரி ஆதரிக்காது என்று பிரதமர் விக்டர் ஓர்பன் (Viktor Orbán) தெரிவித்திருக்கிறார்.

சவுதியில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி விவகாரத்தில் குற்றம் சாட்டப்படும் சவுதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மானுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடா்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

மியான்மர் தேசிய தினத்தை முன்னிட்டு, மியான்மரில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் தூதர் விக்கி போமன் , பத்திரிகையாளர் டோரு குபோடா உட்பட 6,000 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

குடியரசுக் கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றிய நிலையில், சபாநாயகர் நான்சி பெலோசி, பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் மற்றும் ஜனநாயக கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இங்கிலாந்தில் பொருளாதார மந்த நிலை இருப்பதால் , அந்த நாட்டின் நிதியமைச்சர் ஜெரமி ஹன்ட் வரி உயர்வு மற்றும் செலவின குறைப்பு திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் தன்னுடைய மகளுடன் ஏவுகணைகளை பார்வையிடும் படத்தை வெளியிட்டிருக்கிறது அந்த நாட்டு அரசு.

லாஸ்வேகாஸை சார்ந்த நபர் ஒருவர் 3 இஞ்ச் உயரமாக ரூ.1.2 கோடி செலவு செய்து தன்னுடைய கால்களை மாற்றி அமைத்திருக்கிறார்.