கெய்ரோ: எகிப்தில் நடக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பாக நடக்கும் மாநாட்டில், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதி அளிக்க வளர்ந்த நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன.
ஐ.நா., பருவநிலை மாற்ற தீர்மானத்தில் இணைந்துள்ள நாடுகள் பங்கேற்கும் 27 வது மாநாடு எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நவ.,6 முதல் நடந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் போது, உலக வெப்பமயமாதலுக்கு குறைந்த பங்களிப்பு இருந்தாலும் பயங்கர வெள்ளம், வறட்சி , அனல் காற்று, சூறாவளி மற்றும் பஞ்சம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க வளர்ந்த நாடுகள் முன்வந்துள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதற்காக ‘ நஷ்டம் மற்றும் இழப்பு’ என்ற பெயரில் நிதி ஒன்றை உருவாக்க வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் சார்பில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஒப்பு கொண்டனர். வீடுகளை இழந்தவர்கள், விவசாய நிலம் பாழடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த இடத்தை இழந்து அகதியானவர்களுக்கு இந்த நிதி மூலம் மறுவாழ்வு கிடைக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் இந்த மாநாட்டில் இறுதி ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இதற்கு பாரிஸ் ஒப்பந்தப்படி, வளரும் நாடுகள் கார்பன் உமிழ்வை நிறுத்த வேண்டும் என வளர்ந்த நாடுகள் விரும்புவதே இதற்கு காரணம் என சர்வதேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement