நேற்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி மோரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட 19 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு மொத்தம் 5 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 3 ஆயிரத்து 134 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். ஆனால், இந்தத் தேர்வில் 2 ஆயிரத்து 378 பேர் பங்கேற்கவில்லை.
இந்த தேர்வை கண்காணிப்பதற்கு மொத்தம் 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், இரண்டு பறக்கும் படையினரும், ஆறு நடமாடும் அலகுகளும், பத்தொன்பது ஆய்வு அலுவலர்கள், இருபது வீடியோகிராபர்கள், ஆறு ஆயுதம் ஏந்திய போலீசார், பத்தொன்பது தேர்வு கூட காவலர்கள் என்று மொத்தம் 91 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், இந்தத் தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என்று அனைத்து விதமான அடிப்படை வசதிகளும், சிறப்பு நடமாடும் மருத்துவ குழுவும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது” என்று அவர் தெரிவித்தார்.