தூத்துக்குடிக்கு வருகை தந்த உதயநிதி; வரவேற்க முண்டியடித்த கட்சியினரால் விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு

தி.மு.க இளைஞரணியின் சார்பில் தமிழகம் முழுவதும் `இல்லம்தோறும் உறுப்பினர்கள்’ சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்பதற்காக தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயன், சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் காத்திருந்தனர்.

உறுப்பினர் சேர்கையை தொடங்கி வைத்த உதயநிதி

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டுப்புற கலைக்குழுவின் ஆட்டம் பாட்டம், டிரம்ஸ் குழுவினரின் இசை முழக்கத்திற்கு நடுவில் தி.மு.க மாநில இளைஞரணி துணைச்செயலாளரான தூத்துக்குடி ஜோயல், என்ட்ரி கொடுத்து நடந்து வந்தார். சுமார் 1 மணி நேரம் விமான நிலைய வளாகமே டிரம்ஸ் சத்தத்தால் அமர்க்களமானது.

விமானம் தரை இறங்கியதும் உதயநிதி ஸ்டாலினைக் காண அவர் ரசிகர்கள், பெண்கள் விமான நிலைய வாசலுக்கு அருகில் வந்தனர். வி.ஐ.பி-க்கள், கட்சி நிர்வாகிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பெண்கள் சிலர் கீழே தள்ளப்பட்டனர். விமான நிலையத்தின் விமான புறப்பாடு பகுதிக்குள்  நுழையும் நுழைவு வாயிலின் இரண்டு புறமும் நான்கு அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த கருங்கல்லினால் ஆன வரவேற்பு மங்கைகள் சிலைகளில், வலதுபுறச் சிலை கீழே தள்ளப்பட்டதில் சிலையின் தலைப்பகுதி உடைந்து சேதமடைந்தது.  

உடைந்த சிலை

இதில், தொண்டர் ஒருவரின் கையில் காயம் ஏற்பட்டது. விமான நிலைய வளாகத்தில்  இருந்த பூந்தொட்டிகளும் உடைந்தன. உதயநிதி ஸ்டாலினின் கார் கிளம்பியதும் தரையில் ஆங்காங்கே பேனர்கள், செருப்புகள், தண்ணீர் பாட்டில்கள், கட்சித் துண்டுகள் உள்ளிட்டவை விமான நிலைய வளாகத்தில் சிதறி கிடந்தன.

போதிய போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடாததும் மாவட்டச் செயலாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள், மேயர் என ஒவ்வொருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வரவேற்பு அளிக்க போட்டி போட்டிக்கொண்டு முயன்றதும் தள்ளுமுள்ளுக்குக் காரணம் என்கிறார்கள். ”வரவேற்பு கொடுக்குறோம்னு சொல்லி விமான நிலையத்துல இப்படியா சேதத்தை ஏற்படுத்துறது? கருங்கல்லினால் ஆன அந்த வரவேற்பு சிலை வச்சு பத்து வருசத்துக்கு மேல இருக்கும்.

திரண்ட தொண்டர் கூட்டம்

இனிமேல் ஒத்த சிலையை மட்டும் எப்படி வாசல்ல வைக்கிறது. அழகுச்செடிகள் வச்சிருந்த பூந்தொட்டிகளும் உடைஞ்சு போச்சு. மெயின் வாசல்ல கிடக்குற குப்பைகளையெல்லாம் யாரு அப்புறப்படுத்துவாங்க?” என புலம்பியபடியே தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்தனர். போக்குவரத்து போலீஸாரும் போதிய அளவு இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், துணை மேயர் ஜெனிட்டாவின் கார் சேதமானது. வழிநெடுகிலும் அடிக்கடி வாகனங்கள் பிரேக் போட்டதில் வாகனங்கள் உரசியபடியே சென்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.