நாட்டிலுள்ள யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதியாக 2011ஆம் ஆண்டே நடத்தப்பட்டது, புதிய கணக்கெடுப்பை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யானை மனித மோதல்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டமொன்று விரைவில் தயாரிக்கப்படவிருப்பதாவும், இதன் ஒரு அங்கமாக யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் (15) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் யானை மனித மோதல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அநுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வுறு பிரதேசங்களில் உள்ள கிராமங்களுக்கு காட்டு யானைகள் வருவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
யானைகள் வசிப்பதற்கான இடப்பகுதி குறைவடைந்தமை மற்றும் யானைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை யானை மனிதல் மோதல் பிரச்சினைக்குப் பிரதான காரணம் என்பதும் இங்கு புலப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள யானைகள் பயணிக்கும் 16 தாழ்வாரங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த இடையூறுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
யானைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது குறித்து ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளார். இந்தக் குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் உள்ளடங்கலாக நீண்டகாலத் தீர்வுத்திட்டமொன்றை விரைவில் தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்புத் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் தனித்தனியான கூட்டங்களை ஏற்பாடு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
யானை மாத்திரமன்றி குரங்குகள், மந்திகள், மயில் மற்றும் மர அணில்களால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புத் தொடர்பான மதிப்பீடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பைக் குறைப்பதற்கு விரைவில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வனவளப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லைகள் தீர்மானிக்கப்படும்போது விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ சிறிபால கம்லத், கௌரவ சாந்த பண்டார, கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன், கௌரவ தேனுக விதானகமகே, கௌரவ டயானா கமகே, கௌரவ ரோஹன திசாநாயக, கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ விஜித பேருகொட, கௌரவ மொஹான் பிரியதர்ஷன யாப்பா, குழுவின் உறுப்பினர்களான கௌரவ கிங்ஸ் நெல்சன், கௌரவ கபில அதுகோரல, கௌரவ குமாரசிறி ரத்னாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.