திருப்புத்தூர்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் கூட்டுறவுத்துறை சார்பில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் 3,586 பயனாளிகளுக்கு ரூ.30.87 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கேஆர்.பெரியகருப்பன் வழங்கினர். இதனை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டி:
இந்தியாவில் முதல்வர்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். நாடாளுமன்றத் தேர்தலை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாளைக்கு தேர்தல் வைத்தாலும் கூட நாங்கள் வெற்றி பெறுவோம். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் முடிவு செய்வார். தமிழக முதல்வரை மக்கள் விரும்புகின்றனர். அவரை நம்புகின்றனர்.
இந்தியாவில் பொது விநியோக திட்டத்தில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் தான். கூட்டுறவுத் துறையின் முன்னோடி தமிழகம் தான். இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் ஆடு வளர்ப்போர், மாடு வளர்ப்போருக்கு வட்டியில்லா கடனாக ரூ.800 கோடி அளவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையில் வரும் 2023 ஜனவரி முதல் 6,500 புதிய ஊழியர்கள் தேர்வு செய்து நியமிக்கப்பட உள்ளார்கள். இவ்வாறு தெரிவித்தார்.