டாஸ்மாக கடைகளில் கூடுதல் விலை வைத்து மதுபானம் விற்ற 4,658 விற்பனையாளர்களிடம் இருந்து 5.49 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சில்லறை விற்பனை கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பீர், பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு கூடுதலாக விலை வைத்து விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 5900 ரூபாய், 7 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 8,260 ரூபாய், 10 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்தால் 11,800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கும் விற்பனையாளர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன..? என்று, காசிமாயன் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, ‘விலை அதிகமாக வைத்து விற்பனை செய்வதை தடுக்க ஆய்வு மேற்கொண்டதில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 10 மாதங்களில் 29 மாவட்டங்களில் 4,658 விற்பனையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து 5 கோடியே 49 லட்சத்து 64 ஆயிரத்து 400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த 29 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 397 விற்பனையாளர்களிடமிருந்து 46 லட்சத்து 84 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில், 29 மாவட்டங்களுக்கு மட்டுமே தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், அரியலூர், மதுரை (தெற்கு) உள்ளிட்ட 9 மாவட்டங்களில் முறையாக பதிலளிக்கவில்லை.