
டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் செய்தவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு கைதி என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அமலாகத்துறையினரால் கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஹவாலா பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது வீடு, அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.2.82 கோடி பணம் மற்றும் 1.80 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

அவர் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவருக்கு சட்டத்திற்கு புறம்பாக விஐபி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த புகாரை அமலாக்கத்துறை கூறி வந்த நிலையில், அண்மையில் திகார் சிறையின் கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஆம் ஆத்மி அரசு தனது அமைச்சருக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து விஐபி வசதிகளை செய்து வைத்துள்ளதாக பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி புகாரை மறுத்தது.
மருத்துவரின் அறிவுரையின் பேரில் அமைச்சருக்கு இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்தார். இந்நிலையில் மசாஜ் செய்தவர் ஒரு சிறை கைதி என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதாக மணீஷ் சிசோடியா கூறியிருந்த நிலையில், மசாஜ் செய்தவரின் பெயர் ரிங்கு என்றும், அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி எனவும் திகார் சிறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in