தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், கடந்த 15-ம் தேதி நடைபெற்றது. கே.எஸ்.அழகிரி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியால் நியமிக்கப்பட்ட. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் சத்தியமூர்த்திபவனில் திடீரென பரபரப்பு நிலவியது. இதனால் ஏற்பட்ட தள்ளு முள்ளு கைகலப்பாக மாறி, ஒருவருக்கொருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில், களக்காடு நகராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோஷ்வா, கட்சியினர் டேனியல், ராபர்ட் ஆகியோர் படுகாயமடைந்தனர். அதைத் தொடர்ந்து, நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கேவை சந்தித்து, கே.எஸ் அழகிரி மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக நடுநிலையாக, நேர்மையான முறையில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். சம்பவத்தின் போது வெளியாள்கள் யாராவது வந்து தாக்குதலில் ஈடுபட்டார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை முதலில் பலப்படுத்த வேண்டும். இக்கட்டான இந்த சூழலில் கட்சி தலைவர் பதவி எனக்கு அளித்தால், அதை ஏற்று சிறப்பாக செயல்பட நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.