நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குற்றங்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையாக்கப் பட்டிருக்கும் போதிலும், குற்றங்கள் குறைந்தப்பாடில்லை.

மத்தியப்பிரதேசத்தில் மாணவர்களின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ ஆகாஷ் விஜயவர்கியா, “தங்கள் குழந்தைகளை நல்ல பண்பும், பண்பாடும் கொண்ட பொறுப்பான குடிமக்களாக உருவாக்குவது பெற்றோரின் நோக்கம். குழந்தைகள் ஏதாவது நல்லது செய்தால், அதன் பெருமை பெற்றோருக்கும் செல்கிறது. அதுபோல அவர்கள் ஏதேனும் தவறு செய்தாலும் அதற்குப் பெற்றோரும் தான் பொறுப்பு. எனவே ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்தால் அவனுக்கு மட்டுமல்ல, அவனின் பெற்றோருக்கும் குறைந்தது ஓரிரு ஆண்டுகள் தண்டனை கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து.

இதைப்போலவே, கொலையாளிகளின் பெற்றோரும் குற்றவாளியுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும். மேலும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதைத்தாண்டி எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இதுபோன்ற சட்டத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார். ஆகாஷ் விஜயவர்கியா பேசிய இந்த உரையின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டுவருகிறது.