லக்னோ: மேட்ரிமோனி இணையதளம் மூலம் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாண்ட மோசடி குற்றவாளியை உத்தரபிரதேச போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆஷியானா பகுதியை சேர்ந்த ஹரிஓம் துபே என்ற சஞ்சய் சிங் என்பவர், தனக்கான வரன் தேடி ஆன்லைன் திருமண வெப்சைட்டில் (மேட்ரிமோனி திருமண தகவல் மையம்) பதிவு செய்திருந்தார். பிளஸ் 2 வரை படித்த இவர், தனது கல்வித் தகுதியை பிடெக் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது விபரங்களை அறிந்த பீகாரை சேர்ந்த ரோஹ்தாஸ் திர்கான் என்ற பெண்ணின் குடும்பத்தினர், சஞ்சய் சிங்கை தொடர்பு கொண்டனர். பின்னர் அவரது குடும்ப பின்னணியை விசாரித்தனர். தொடர்ந்து சஞ்சய் சிங்கிற்கும், ரோஹ்தாஸ் திர்கானுக்கும் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி திருமணம் நடந்தது. திருமண நாளன்று சஞ்சய் சிங் குடிபோதையில் இருந்தார்.
இதையறிந்த பெண் வீட்டார் பிரச்னை செய்தனர். பின்னர் சஞ்சய் சிங்கின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெண் வீட்டாரை சமாதானப்படுத்தினர். திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் ஆஷியானாவில் உள்ள சஞ்சய் சிங்கின் வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, சஞ்சய் சிங் மனைவியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். சில நேரங்களில் அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். திருமணமான 26 நாட்கள் முடிந்த நிலையில், தனது மனைவியை பீகாரில் உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு செல்லும்படி கூறினார். அதனால் ரோஹ்தாஸ் திர்கான் தனது பொருட்களை பேக் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில், வரதட்சணையாக கிடைத்த ரூ.1 லட்சம் ரொக்கம், சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் காரை எடுத்துக்கொண்டு சஞ்சய் சிங் தப்பியோடிவிட்டார்.
கணவரால் ஏமாற்றம் அடைந்த ரோஹ்தாஸ் திர்கான் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பின் பெற்றோரின் ஆலோசனையின் பேரில் ஆஷியானா போலீசில் புகார் அளித்தார். அவர்கள் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளனர். இதுகுறித்து ஆஷியானா போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் சிங்கிற்கு ஏற்கனவே திருமணமாகி உள்ளது. அவருக்கு 12 மற்றும் 14 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியிருந்தும் தான் பிடெக் பட்டதாரி என்று திருமண பதிவில் போலியாக பதிவு செய்து பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. தனது இரண்டு பெயர்களிலும் பதிவு செய்துள்ளார். இவரிடம் பீகாரை சேர்ந்த மற்றொரு பெண் ஏமாந்துள்ளார். இவரது திருமண மோசடி குற்றச்செயலின் பின்னணியில் அவரது மனைவிக்கும் பங்குள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.