Morbi Tragedy: மோர்பி பால விபத்து: 3,165 டிக்கெட்டுகள் விற்பனை.. துருபிடித்த கேபிள்கள் – ஷாக் தகவல்கள்!

குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளான நாளன்று, 3,165 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட தகவல் தடயவியல் விசாரணையில் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்கே, 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விபத்துக்கு உள்ளானது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில், தொங்கு பாலம் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தில் இருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆற்றுக்குள் மூழ்கினர். இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விபத்து நடந்தப் பகுதியை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் தெரிவித்தார். மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக குஜராத் அரசு அமைத்த 5 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், தடயவியல் துறையினரும் விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கையை குஜராத் மாநில அரசிடம் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மோர்பி பாலம் விபத்து தொடர்பாக, தடயவியல் துறையினர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை, நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த விசாரணை அறிக்கையின் விவரம்:

மோர்பி பாலத்தை பராமரிக்கும் ஒரிவா என்ற தனியார் நிறுவனம் விபத்து நடந்த தினத்தன்று 3,165 டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பாலத்தில் பணியாற்றும் டிக்கெட் வினியோகஸ்தரிடம் கொடுத்துள்ளது. அவை அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யபடாத போதும், 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் எடை தாங்கும் திறன் குறித்து ஒரிவா நிறுவனம் கணிக்கவில்லை.

தொங்கு பாலத்தின் கேபிள் கம்பிகள் துருபிடித்துள்ளது. பாலத்தை தாங்கும் கம்பிகள் அறுந்துள்ளன. பாலத்தை தாங்கும் கம்பிகளையும், கேபிள் கம்பிகளையும் இணைக்கும் பகுதியில் உள்ள ‘பொல்ட்டுகள்’ காணவில்லை. ஒப்பந்ததாரரால் புதிதாக அமைக்கப்பட்ட கனமான தரைப்பகுதியின் எடையை பழைய கேபிள் கம்பிகளால் தாங்கும் திறன் இல்லை.

ஒரிவா நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தொங்கு பாலத்தின் டிக்கெட் விற்பனையாளர், பாலத்தின் காவலாளிகள் என அனைவருமே தினக்கூலி தொழிலாளர்கள் ஆவர். கூட்ட நெரிசலை மேலாண்மை செய்வது குறித்து இவர்களுக்கு எந்தவித நிபுணத்துவமும் இல்லை.

தொங்கு பாலத்தின் மீது எவ்வளவு மக்களை அனுமதிக்கப்படவேண்டும், பாதுகாப்பு நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து காவலாளிகளுக்கு தெரியப்படுத்தவில்லை. விபத்து நடைபெறும் பட்சத்தில் மக்கள் உயிரை காப்பாற்ற உயிர் காப்பாளர்கள் அல்லது படகுகளை ஒரிவா நிறுவனம் வைக்கவில்லை. நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமலேயே தொங்கு பாலம் திறக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.