உங்கள் முயற்சி வெற்றி பெறாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய ஆளுநர், “கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமியாகும். பாரத மாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், அருளாசி நிறைந்த பகுதியாகவும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசியத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை அமைந்துள்ளது.

அதன்பிறகு அவர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை, இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகுக்கு சொல்லும் வித மாக அமைந்தது. எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இருபெரும் மகான்களில் ஒருவர், ஸ்ரீராமானுஜர். மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன். இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வரவேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள், இந்தியாவில் ஒரு இன அருள் புரட்சியை உருவாக்கி உள்ளது. மதத்தின் திறவு கோல்களாக ராமானுஜரும், விவேகானந்தரும் இருந்தார்கள்.

உலகத்தின் கடைசி வரை உள்ள மக்களும், இவர்களது அரும்பணியை உணர்ந்து கொண்டார்கள். விவேகானந்தர், தன்னை புதிய மனிதர் என்று அறிந்த அதே இடத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை எனக்கு நல்கிய அத்தனை மகான்களையும் அவர்களது பாதங்களையும் வணங்கி மரியாதை செலுத்துகிறேன். இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழலை உருவாக்கும். இந்த உரிமைகளை பாரதம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த பாரத திருநாட்டில், தீவிரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியாது. 

கன்னியாகுமரியில் நாளை திறக்கப்பட இருக்கும் ஸ்ரீராமானுஜர் சிலையானது, தென்கோடிக்கு அருள்பா லிக்கும் அடையாளமாக திகழும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இதுவரை, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.அதேபோல் ஸ்ரீராமானுஜர் சிலையும் சுற்றுலா பயணிகள் தரிசித்து செல்லும் இடமாக அமையும்” என்றார்.

நாளை நடக்கும் இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் பகல் 12மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.