
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு பணியிடங்களிலும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி உள்ளிட்ட 12 துறைகளின் முதன்மைச் செயலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “தமிழகத்தின் வளர்ச்சி என்பது ஓர் துறை சார்ந்த வளர்ச்சியாக இருக்க கூடாது. அது அனைவருக்குமான வளர்ச்சியாக தான் இருக்க வேண்டும் அதுதான் திராவிட மாடல் ஆட்சி. 2011-ம் ஆண்டு கலைஞர் அவர்களால் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்காக தனி துறை உருவாக்கப்பட்டது. அது கலைஞரின் நேரடி கவனிப்பில் செயல்பட்டது. அதே போல தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையானது எனது தனி கவனிப்பில் செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையானது 1000 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் தொழில் தொடங்க குறைந்த பட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பு 45-ல் இருந்து 55 ஆக உயர்த்தபட்டுள்ளது.
நகர பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் உடன் உதவிக்காக ஒருவர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், உதவி உபகரணங்கள், உதவித் தொகை உள்ளிட்டவை உடனடியாக ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடு வழங்க 5 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவாக வீட்டுமனை வழங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பள்ளிகளில் 1294 சிறப்பாசிரியர்களுக்கு மதிப்பூதியம் 14 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் 1 கோடியே 54 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தும் அனுமதியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகை இனி ரொக்கமாக வழங்கப்படும்.
அரசு வளாகங்களில் ஆவின் மையம் அமைப்பதற்கு முன்தொகை அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய கட்டடம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து அரசு பணியிடங்களிலும் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
மேலும், தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான பணிகள் அமைக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சரியான வகையில் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறதா என கண்காணிக்க உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கண்டறிய உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.