'உதயநிதி முதலமைச்சர் ஆகணும்..!' – அமைச்சர் ஐ.பெரியசாமி மருமகள் ஆசை..!

முதலமைச்சர் ஆக வேண்டும் என, தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகள் மெர்சி செந்தில் குமார் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர், ஐ.பெரியசாமியி. இவரது மகன் செந்தில் குமார் பழநி தொகுதி எம்எல்ஏவாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், எம்எல்ஏ செந்தில் குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில் குமார், தனது முகநூல் எனப்படும் பேஸ்புக் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி உள்ளதாவது:

ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம்.

அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார். ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத் தான். கொரோனா காலத்தின் போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான். குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லாருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும்.

நீங்கள் இந்த நாட்டின் அமைச்சராக வேண்டும்.. வருங்காலத்தில் முதலமைச்சர் ஆக வேண்டும்.. என்பதெல்லாம் எங்கள் கனவு, லட்சியம், ஆசை! இவையெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக நடந்தேயாகும்.. உங்கள் உழைப்புக்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் தொழிலையும் ஆசிர்வதிப்பாராக.. உங்கள் தங்கைகள் நாங்கள் எல்லாரும் என்பதில் எங்களுக்கு எப்போதுமே பெருமை தான்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவை திமுக உடன் பிறப்புகள் பல்வேறு தளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.