தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்ததன் ‘அரசியல்’ காரணம் என்ன?!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் நேற்று முந்தினம் ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். ஆளும் திமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எடப்பாடி பழனிசாமி, ஆளுநரிடமும் புகார்ப்பட்டியலை வாசித்திருக்கிறார். தவிர, அரசியல் ரீதியாகவும் இந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளன. இந்தநிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி என்ன?

எடப்பாடி பழனிசாமி – ஆர்.என்.ரவி

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய எட்டுப் பேரும் நேற்று முந்தினம் மதியம் 12.30 மணியளவில், ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தனர். அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உரிய முறையில் கவனம் செலுத்தி தடுத்திருக்கலாம். இதையெல்லாம் செய்ய உளவுத்துறை தவறிவிட்டது. இந்த அரசு திறமையற்றது என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக போதைப்பொருளை தடுக்க முடியவில்லை. அண்டை மாநிலத்திலிருந்து சர்வ சாதாரணமாக போதைப்பொருள், தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் கிடைத்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அதேபோல டெண்டர் முறைகேடு, வழக்கமாக ஒப்பந்தம் விடப்பட்டு பணி தொடங்குவார்கள், பணி முடித்த பிறகுதான் பில் வாங்குவார்கள். ஆனால் இந்த ஆட்சியில் அப்படி இல்லை. ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன் பணி செய்யாமலேயே பில் வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். அதுபோல இந்த ஆட்சியில் ஊழல் நடைபெறுவதற்கு இதுவே மிகப்பெரிய சான்று. கரூரில் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு சில அதிகாரிகளை மட்டும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால் ஒரு அதிகாரி மூலமாக இது நடக்காது. யாரோ ஒரு அதிகாரமிக்கவருடைய ஆணையின் பேரில்தான் இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற முடியும். டாஸ்மாக் முறைகேடு பற்றி நான் சொல்லவே தேவையில்லை. முறைகேடாக மதுபான ஆலையிலிருந்து கலால் வரி செலுத்தாமல் கொண்டுவரப்படுகின்ற மதுபான வகைகளை பார்களில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், “இந்தச் சந்திப்பில் ஆளும் திமுகதான் பிரதான டார்க்கெட் என்றாலும் இதற்குப் பின்னால் பல அரசியல் காய்நகர்த்தல்களும் இருக்கின்றன” என்கின்றனர், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள்,

“ இந்த ஆட்சியில் நிகழ்ந்து வரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் முறைகேடுகள் என அனைத்தையும் ஆளுநரிடம் மனுவாகக் கொடுத்திருக்கிறோம். எடப்பாடியார் சில விஷயங்களை ஆளுநரிடம் வாசித்தும் காட்டினார். நாங்கள் குறிப்பிட்ட பல்வேறு விஷயங்கள், ஏற்கெனவே தெரியும் என்பதுபோல் தான் ஆளுநரின் ரியாக்‌ஷனும் இருந்தது. அதுமட்டுமல்ல, ஆளும் திமுக அரசாங்கத்தின் மீது ஊழல் சார்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆளுநரே நேரடியாக சில விஷயங்களில் தலையிட வேண்டும், அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்கவேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறோம். ஆனால், இந்தச் சந்திப்புக்கு இது மட்டுமே காரணமல்ல. பாஜக நாங்கள்தான் எதிர்க்கட்சி என ஒரு தோற்றத்தை தமிழ்நாட்டில் உருவாக்கிவந்த நிலையில், எடப்பாடியாரின் சமீபத்திய செயல்பாடுகள் அதை முற்றிலுமாக மாற்றிவிட்டன. ஆளுநருடனான சந்திப்பும் அதில் ஒன்று.

சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.,

பாஜகவினர் மீடியாக்களில் மட்டுமே பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், எடப்பாடியார் தொடர்ச்சியாக மக்களைச் சந்தித்து வருகிறார். மக்கள் பிரச்னைகளைப் பேசிவருகிறார். அதுமட்டுமல்ல, ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்தும் அவரைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் வருகின்றனர். இந்தநிலையில், ஆளுநரை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக ஆளுநரைச் சந்தித்து டெல்லி மேலிடத்திலும் ஒரு சாப்ட் கார்னரை உருவாக்கலாம் என்பதே எடப்பாடியின் திட்டம். அதனால்தான், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பலமுறை டைம் கேட்டும் கொடுக்காத ஆளுநர், எங்களைச் சந்திப்பதற்கு உடனடியாக நேரம் கொடுத்தார். சசிகலா, ஓ.பி.எஸ், தினகரனுடன் இணைந்து வேலை செய்யுமாறு ஆளுநர் கூறியதாக ஒரு தகவல் பரவுகிறது. அதில் உண்மை இல்லை. ஆளுநர் அப்படி எதுவும் பேசவில்லை” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.