தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற ஆன்மிக இலக்கியம் காரணமா? – ஆதீனங்கள் கருத்துக்கு தமிழ், வரலாற்று பேராசிரியர்கள் மறுப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வந்த தமிழக ஆதீனங்களின் பேட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் இரண்டு தினங்களுக்கு முன் வெளியானது. இதில், ஆன்மிக இலக்கியங்களால்தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாக அவர்கள் கூறியிருந்தனர். இது தவறான கருத்து எனவும், 2004-ல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க சங்க இலக்கியங்களே காரணம் என்றும் தமிழ் மற்றும் வரலாற்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநராக பதவி வகித்த பேராசிரியர் க.ராமசாமி ‘இந்து தமிழ்திசை’ நாளிதழிடம் கூறும்போது, “தமிழுக்கு செம்மொழி அந்தஸ்துகிடைக்க சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சம்ஸ்கிருதம் படித்த தமிழ் அறிஞருமான ஜார்ஜ் எல். ஹார்ட் எழுதிய கடிதம் அடிப்படையானது. இவர் மறைமலை இலக்குவனாருக்கு எழுதிய கடிதத்தில், செம்மொழி அந்தஸ்து அளிக்க அனைத்து வகையிலும் தகுதியானது தமிழ் எனக் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்களை கொண்ட மத்தியக்குழு அமைக்கப்பட்டு பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

தமிழில் எழுதப்பட்ட தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு உள்ளிட்ட 41 சங்க இலக்கியங்கள் செவ்வியல் நூல்கள் என முடிவு செய்யப்பட்டன. இதனால், அவை எழுதப்பட்ட தமிழுக்கு, செம்மொழி அந்தஸ்து அளிக்குமாறு மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இது ஏற்கப்பட்டு, மத்தியஅரசால் செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதில், பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படை மட்டுமே பக்தி இலக்கியம்.மற்ற அனைத்தும் சங்க இலக்கியங்களே” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் கூறும்போது, “ஆதீனங்கள் குறிப்பிடும் ஆன்மிக இலக்கியங்களை தமிழகத்தில் பக்தி இலக்கியங்கள் என்று அழைக்கிறோம். கி.பி 6-ம் நூற்றாண்டில் தொடங்கி, 10-ம் நூற்றாண்டுக்கும் மேலாக பக்தி இலக்கியங்கள் தொடர்ந்துள்ளன. ஆனால், இதற்குஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழுக்கு பழமையான ஒருஇலக்கிய மரபு உள்ளது. இதன்படி கி.மு 3-ம் நூற்றாண்டு முதல் கி.பி3-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்டவைதான் நம் சங்க இலக்கிய நூல்கள். அதேசமயம், தமிழை புதிய தளத்தில் பயன்படுத்தி வளர்த்ததில் பக்தி இலக்கியங்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

தமிழக ஆதீனங்களின் கருத்தை மறுத்து, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எஸ்.சாந்தினிபீ கூறும்போது, “தமிழ் எழுத்து கி.மு. 3-ம் நூற்றண்டிலேயே இருந்தது. இதற்கு பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடும் மதுரை-மாங்குளம் கல்வெட்டே ஆதாரம். கீழடி அகழாய்விலும் தமிழி எழுத்துக்கள் கி.மு 6-ம் நூற்றாண்டை சேர்ந்தவை என அறியப்பட்டுள்ளது. எனவே, பக்தி இலக்கியங்களின் வயது இன்றைக்கு 1,500 என்றால் சங்க இலக்கியங்களின் வயதோ குறைந்தது 2,400 ஆகும். செம்மொழிக்கு தேவையாக பத்து குணங்களில் ஒன்றான தொன்மை, சங்க இலக்கியங்களுக்குதான் உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.