பன்னாட்டு, தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள்; 190 பேருக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற 190 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, இந்த ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற டி.செல்வபிரபு, கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பரத் தர், இந்தோனேசியாவின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் எஸ்.மாஹீஸ்வரன், எஸ்.கார்த்திக் மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்ற 190 வீரர்கள், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கினார்.

முன்னதாக, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், அகிலஇந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வெற்றி பெற, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளை விரைவில் ஒன்றுதிரட்டி விழா நடத்தி, அவர்களை முதல்வர் உற்சாகப்படுத்த இருக்கிறார். இந்தியாவில் தமிழகத்தை விளையாட்டுகளின் தலைநகரமாக மாற்றிக் காட்டுவோம் என்ற உறுதியோடு முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்றுவரை 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40 கோடியே 90 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

விழாவில் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா,விளையாட்டு மேம்பாட்டு ஆணையதலைமை செயல் அலுவலர் கார்த்திகேயன், தமிழ்நாடு ஒலிம்பிக்சங்கத் தலைவர் ஐசரி கே.கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைத்து வீரர், வீராங்கனைகளை விரைவில் ஒன்றுதிரட்டி விழா நடத்தி, அவர்களை முதல்வர் உற்சாகப்படுத்த இருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.