ரயில் இன்ஜினையே ‛ஆட்டையை போட்ட பலே பீஹார் கும்பல்; இரும்பு பாலத்தை ‛அபேஸ் செய்த அதிசயம்| Dinamalar

பாட்னா: பீஹாரில் கொள்ளையர்கள் கும்பல் ரயில் இன்ஜினையே சிறிது சிறிதாக பொருட்களை திருடி விற்றுள்ளது. மற்றொரு இடத்தில் ரயில்வே இரும்பு பாலத்தையும் கழற்றி ‛அபேஸ்’ செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு சம்பவம் பலவற்றில் வித்தியாச வித்தியாசமான பாணியை கொள்ளையர்கள் கையாள்வது வழக்கம். ரயிலில் கூட பயணிப்போல நடித்து திருடுவதை கேள்விப்பட்டிருப்போம். பீஹாரில் ஒரு கும்பல் ரயில் இன்ஜினையே திருடியிருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருட்டு தொழிலில் ஈடுபட்ட மூன்று பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த சம்பவம் போலீசாருக்கே தலை சுற்றவைத்துள்ளது.

பீஹார் மாநிலம் பரவுனி நகரில் கர்ஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் இன்ஜினையே தனித்தனியாக கழற்றி திருடிச் சென்றுள்ளது அந்தக் கும்பல். ரயில் நிலையத்தின் அருகில் பயன்பாடற்ற சுரங்கப்பாதை வழியாகவே இந்த திருட்டு செயலை அரங்கேற்றியுள்ளனர்.

திருடிய ரயில் இன்ஜின் பொருட்களை முசாபர்பூர் பிரதாப் காலணியில் உள்ள பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடையில் விற்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்கிருந்து 13 இன்ஜின் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல், மற்றொரு ருசிகரமான சம்பவமும் பீஹாரில் உள்ள புர்னியா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்தில் ஒரு பழமையான நீராவி ரயில் இன்ஜின் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இன்ஜினை போலியான கடிதம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார் அதே ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே இன்ஜினியர் ஒருவர்.

latest tamil news

மேலே நடந்த இரு சம்பவங்களை விட சுவாரஸ்யமான ஒரு திருட்டு சம்பவமும் அதே பீஹாரில் நடந்துள்ளது. அவர்கள் ரயில் திருட்டு கும்பல் அல்ல, ரயில்வே பாலத்தையே திருடிய கும்பல். ராணிகஞ்ச் மாவட்டத்தில் பால்டானியா என்ற ரயில்வே பாலம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. சுமார் 500 டன் இரும்பால் ஆன இந்த பாலத்தில் இருந்து கடந்த ஏப்ரலில் ஒரு கும்பல் இரும்பு பொருட்களை ஒவ்வொன்றாக கழற்றி கொள்ளையடித்து சென்றுள்ளது.

பாலத்தை பழுது பார்ப்பது போல் நடித்து சிலர் இரும்புகளை திருடியுள்ளனர். பாலம் சற்று பலவீனமானதை அடுத்து சுதாரித்துக்கொண்ட போர்பஸ்கஞ்ச் போலீசார், அந்த மர்ம கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அந்த பாலத்திற்கு ஒரு கான்ஸ்டபிளை காவலுக்கு வேறு வைத்துள்ளனராம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.