ரேஷன் பொருட்கள் கொள்முதலில் வரி ஏய்ப்பு புகார்; வருமான வரித்துறை 2-வது நாளாக சோதனை: வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் தொடங்கி முறைகேடு

சென்னை: பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கொள்முதலில் வரி ஏய்ப்பு செய்ததாக 5 நிறுவனங்கள் மீது புகார் எழுந்த நிலையில், அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 2-வது நாளாக நேற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், பினாமி பெயரில் வெளிநாடுகளில் நிறுவனங்கள் தொடங்கி, அவற்றில் கோடிக்கணக்கில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்களைக் கணக்காய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்துக்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்க காமாட்சி அண்ட் கோ,அருணாச்சலா இம்பெக்ஸ், ஹிராஜ் டிரேடர்ஸ், பெஸ்ட் டால் மில் மற்றும் இன்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர் ஆகிய 5 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து, மாவட்ட வாரியாக விநியோகித்து வருகின்றன.

இந்நிலையில், கரோனா காலகட்டத்தில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ததில், அரசுக்கு முறையான கணக்கு காட்டாமல், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக இந்த நிறுவனங்கள் மீது புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில், இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மண்ணடி, தண்டையார்பேட்டை, ஏழுகிணறு, சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சேலம், மதுரை, கும்மிடிப்பூண்டி என தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத பணம், நகை மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது. இதில், பருப்பு, பாமாயில் இறக்குமதி செய்வதற்காக, வெளிநாடுகளில், பினாமி பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த நிறுவனங்களில் கோடிக் கணக்கில் முதலீடு செய்து, அந்த போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பருப்பு, பாமாயிலை தமிழகத்துக்கு இறக்குமதி செய்ததும் தெரியவந்துள்ளது. அதுதொடர்பான முக்கிய ஆவணங்கள் சோதனையில் சிக்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில், நிறுவன உரிமையாளர்கள், பங்குதாரர்களிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில்தான், போலி நிறுவனங்கள் குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2021-22-ம் காலாண்டில் அளித்தவருமான வரி கணக்குடன் இந்தஆவணங்களை ஒப்பிட்டு,அவற்றை ஆய்வு செய்யும் பணிநடந்து வருவதாகவும், இப்பணிமுடிந்த பிறகே இந்த நிறுவனங்கள் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்தது என்பது தொடர்பான முழு விவரங்களை தெரிவிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.