குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்: மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும்?!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளது. ஆனால், அறிவித்தபடி இதுவரை தமிழக அரசு அந்த திட்டத்தை செய்யப்படுத்தவில்லை என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சலசலப்புக்கு மத்தியில் அமைச்சர்கள் அவ்வப்போது உரிமைத்தொகை திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அமைச்சர் பிடிஆர் போட்டுள்ள ட்வீட்டில், முதல்வரின் புரட்சிகரமான உரிமைத் தொகை திட்டத்தின் செயல்முறைகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் EAC குழுவுடன் நேற்று நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செ‌ய்‌திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூகநீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது” என பதிவிட்டிருந்தார்.

இதனால் விரைவில் அத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதே சமயம், விமர்சனங்களை ஆற போட அமைச்சர் முயற்சிக்கிறாரா என்றும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும், உரிமை தொகை திட்டம் குறித்து முதல்வருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேதியை முன்கூட்டியே அறிவிக்காமல் அதற்கான முன்னெடுப்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டு மகளிர் தினத்தன்று இந்த திட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.