ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்பு; அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி,

இந்தியாவுடன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பு என வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது.

இந்த ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்து கடந்த 16-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வரும் 1-ம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.

இந்நிலையில், ஜி20 நாடுகளின் அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்க உள்ள நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 5-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் மொத்தம் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்பது, அடுத்த ஓராண்டுக்கு இந்தியாவில் நடத்தப்படும் ஜி20 அமைப்பின் மாநாடுகள் தொடர்பாகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.