நீதித்துறை மக்களை அணுக வேண்டியது அவசியம்: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

“மக்கள் நீதித் துறையை அணுகுவதற்கு பதிலாக, நீதித் துறை மக்களை அணுக வேண்டியது அவசியம்,”
என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து உள்ளார்.

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மெய் நிகர் நீதி கடிகாரம், கைப்பேசி செயலி 2.0 டிஜிட்டல் நீதிமன்றம், எஸ். 3 வாஸ் இணையதளம் ஆகிய நீதித் துறை தொடர்பான சேவைகளை தொடங்கி வைத்தார். விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில், நீதித் துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக, அனைவருக்கும் நீதி கிடைப்பது மாறி உள்ளது. நீதி கிடைக்க செய்வதில், நீதித் துறை பல விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

உச்ச நீதிமன்றம், டெல்லியின் திலக் மார்க்கில் அமைந்திருந்தாலும், அது நாட்டு மக்கள் அனைவருக்குமான உச்ச நீதிமன்றம். வழக்கறிஞர்கள், தங்கள் இடத்தில் இருந்து வழக்குகளை வாதாட மெய்நிகர் அணுகல் சாத்தியமாக்கி உள்ளது. வழக்குகள் பட்டியலில் தொழில்நுட்பத்தை பயன்படுத்த நான் விரும்புகிறேன்.

மக்களை நீதித் துறை அணுக வேண்டியது முக்கியம். மாறாக, நீதித் துறையை மக்கள் அணுக வேண்டும் என்பது எதிர்பார்க்கக் கூடாது. சட்டத் துறையில், விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.