போதை பொருள் விற்பனையில் பாஜகவினர் – ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் பாளையங்கோட்டை மண்டலத் தலைவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வழக்கறிஞர் சூரியா வெற்றிகொண்டான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “ திரவிட இயக்கம்தான் இனத்தையும்  மொழியையும்  காப்பாற்றும் கொள்கையுள்ள கட்சி. இந்தி எதிர்ப்பு என்பது திமுககாரனின் ரத்தத்தில் ஊறியது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அரசியலுக்கு வர காரணம் இந்தி எதிர்ப்புதான். தனது 14 வயதில் தமிழ் கொடியை கையில் ஏந்தி 93 வயதுவரை  இந்தியை  எதிர்த்தே மறைந்தவர் கலைஞர். 

இந்தியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் 62 நாள் பாளையங்கோட்டையில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மும்மொழிக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் இன்று அவர்களின் தாய் மொழி அழிந்துவருகிறது. மக்களை ஏமாற்றி ஒன்றிய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது , இதற்கு ஒரு ஆளுநர் வேறு பணியாற்றுகிறார். நமது வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டு தமிழகம் திராவிட நாடு இல்லை என்கிறார். தமிழை அழிக்க முயற்சி நடக்கிறது .

ஆளுநரைச் சந்தித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, ஊழல் நடக்கிறது, போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என புகார் அளித்துள்ளார்.  எடப்பாடியை பார்த்து கேட்கிறேன் உங்கள் ஆட்சியில் எல்.ஈ.டி பல்பு வாங்கியது , தொடப்பம் வாங்கியது முதல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது . இதுகுறித்து நானும், சபாநாயகரும் வழக்கு தொடுத்துள்ளோம். மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் குட்கா விற்பனை செய்ததாக  ஒன்றிய அரசு சிபிஐயை வைத்து அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயகாஸ்கர், காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது . தற்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துவிட்டது. எனவே நீங்கள் அனைவரும் சிறை செல்வது உறுதி. 

போதை பொருள் விற்பனையில் பாஜகவினர்தான் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டுகிறேன், உதாரணமாக  5½ கோடி ரூபாய் மதிப்பில் சிக்கிம் மாநிலத்தில் ஹெராயின் போதைப் பொருள் துறைமுகத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது , ஆனால் தற்போது இந்த பொருட்கள் எங்கே சென்றது என தெரியவில்லை , துறைமுகம் யார் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள், தைரியம் இருந்தால் எடப்பாடி இதுகுறித்து கேட்கட்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட துணை செயலாளர் விஜிலாசத்தியானந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.