மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர நடைபாதை: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதையை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளால் மெரினா கடற்கரையின் நீண்ட மணற்பரப்பில் நடந்து செல்ல இயலாது. மெரினா கடற்கரையில் கால் நனைப்பது என்பது அவர்களுக்கு எட்டாத கனியாகவே இருந்து வந்தது. எனவே, சென்னையில் உள்ள ஊனமுற்றோர் உரிமை இணையம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத் திறனாளிகள் நல அமைப்புகள், சாதாரண குழந்தைகளைப் போல, மாற்றுத் திறனாளி குழந்தைகளும் கடல் அலையை ரசிக்கவும், அலையில் கால்களை நனைத்து மகிழவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சியிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தன.

இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி, மாற்றுத்திறனாளிகளுக்காக பண்டிகை காலங்களில் மட்டும் மெரினா கடற்கரையில் தற்காலிக நடைபாதை அமைத்து வருகிறது. அதன்படி, கடற்கரை சாலையிலிருந்து கடல் வரைக்கும் இந்த தற்காலிக பாதை அமைக்கப்படும். இந்தப் பாதை வழியாக சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகள் கடல் வரை சென்று கடலில் கால் நனைக்க வழி செய்யப்படுகிறது.

அதேசமயம், இந்த பாதையை நிரந்தர பாதையாக அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதனையேற்று, மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்க சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தர நடைபாதை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக, ரூ.1.14 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நிரந்த நடை பாதை அமைக்கும் பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வந்தது.

அந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதையை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.