ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்திரா காந்தி சிலை அகற்ற முற்பட்டதால் பரபரப்பு… 4மணி நேரம் போக்குவரத்து நெரிசல்…

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்திரா காந்தி சிலை அகற்ற முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சில மாதங்களாகவே அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப் பட்டு, வாகனங்கள் மெதுவாகவே செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில்,  ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலை உள்ளது. இது 1988ல்  நிறுவப்பட்டது. இந்த சிலை, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்து வருவதால், அதை  அகற்ற அந்த பகுதி காங்கிரசாருக்கு தகவல் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் இதுவரை அதை அகற்றி பாதுகாப்பான இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து,  நெடுஞ்சாலை துறையினர் இன்று வருவாய்த்துறை மற்றும் நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் கிரேன் மூலம் சிலையை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இன்று (சனிக்கிழமை) காலை சுமார் 6.30 மணிக்கு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு,  9மணி வரை நடைபெற்றது. இதையறிந்த காங்கிரஸ் கட்சியினர் அங்குகூடி,  அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக  காங்கிரஸ் நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வ பெருந்தகைக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். அவர் வந்து,  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சிலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்குள் ஏன் சிலையின் பீடத்தை உடைத்தீர்கள் என கண்டித்தார். பின்னர் சிலையை அகற்றும் பணியை நிறுத்துமாறு கூறினார். இதையடுத்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சிலையை அகற்றும் பணியை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து, இந்திரா காந்தி சிலையை அகற்ற காங்கிரஸ் கட்சியினருக்க்கு இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இதனால் அந்த பகுதியில் பதற்றம், பரபரப்பு நிலவியது.

இதனால், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சில மணி நேரங்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,   சுமார் 10 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர், காங்கிரஸ் கட்சியினர் கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து, சுமார் 4மணி நேரத்துக்கு பிறகு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.

இந்த இந்திராகாந்தி சிலையை மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.