Gujarat Polls: 'நாட்டில் சிலீப்பர் செல்களை அடையாளம் காண குழு!' – பாஜக தேர்தல் வாக்குறுதி

நாட்டில் பயங்கரவாத சிலீப்பர் செல்களை அடையாளம் கண்டு, ஒழிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான இங்கு, கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குஜராத் மாநிலத்தில், மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க, ஆளும் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற, பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்க தயாராக உள்ளது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும், பாஜகவும் டஃப் கொடுக்கும் என கூறப்படுகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று, குஜராத் மாநிலம் காந்தி நகரில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அக்கட்சி தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:

நாட்டில் அச்சுறுத்தும் ஆற்றல் வாய்ந்த சக்திகள், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் ஆகியவற்றின் சிலீப்பர் செல்களை அடையாளம் கண்டு அவற்றை ஒழிப்பதற்கான குழு ஒன்றை நாங்கள் அமைப்போம். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கு எதிரான சட்டம் ஒன்றையும் உருவாக்குவோம். பொது மற்றும் தனியார் சொத்துகளை தாக்கி சேதப்படுத்தும் சமூக விரோத சக்திகளிடம் இருந்து அவற்றை மீட்பதற்கேற்ற வகையில் சட்டம் இயற்றப்படும்.

போலி வாக்குறுதிகளை அளிக்கும் எதிர்க்கட்சிகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சுதந்திரமாக இருக்கின்றன. காரணம், அவை ஒருபோதும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. மக்களை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே அவை செயல்பட்டு வருகின்றன. பாஜக மட்டுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி. வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். பாஜகவுக்கு வாக்களித்து மீண்டும் அரியணையில் அமர வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.