குவஹாத்தி : அசாம் – மேகாலயா எல்லையில் ஏற்பட்ட வன்முறையால், மேகாலயாவுக்கு வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்டு இருந்த தடையை அசாம் நேற்று நீக்கியது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்ட வனப்பகுதியில் இருந்து சிலர், 22ம் தேதி மரங்களை வெட்டி கடத்தினர். மேகாலயா எல்லையில் அசாம் போலீசார் லாரி டயரை சுட்டு டிரைவர் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, மேகாலயாவில் இருந்து ஏராளமானோர் எல்லைப் பகுதியில் குவிந்தனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் விடுவிக்கக் கோரி வனத்துறை மற்றும் போலீசாரை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதில் வனக்காவலர் உயிரிழந்தார். இதையடுத்து, கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, மேகாலயா எல்லையில் உள்ள அசாம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மேலும், மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய வசதி துண்டிக்கப்பட்டது. அசாமில் இருந்து மேகாலயாவுக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆறு நாட்களுக்குப் பின் நேற்று தடை நீக்கப்பட்டது. அசாமின் பல பகுதிகளில் இருந்து வரும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மேகாலயாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அசாமில் இருந்து மேகாலயாவுக்குள் செல்வதை தவிர்க்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்தியாவசியமாக செல்ல வேண்டியிருந்தால் மேகாலயா பதிவு எண் உடைய வாகனத்தில் செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்திஉள்ளனர். எல்லையில் இருமாநில போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, இரு மாநில எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேகாலயாவில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மேலும் சில நாட்களுக்கு கண்காணிப்பை தீவிரப் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்