ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாரத்துக்கு ஒரு நாள் ஒரு வீட்டுக்கு 4 குடம் குடிநீர் மட்டுமே கிடைப்பதால் 2 கிராம மக்கள் குடிநீருக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் கருங்குடி ஊராட்சியைச் சேர்ந்தது கொத்தியார்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் 170 குடும்பங்களும், இதன் அருகே ஆலங்குளம் கிராமத்தில் 30 குடும்பங்களும் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களிலும் 800-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இரண்டு கிராமங்களுக்கும் கொத்தியார்கோட்டையில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, அதன் அருகில் 5 குழாய்கள் அமைக்கப்பட்டு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக் கப்படுகிறது.
இக்கிராமங்களுக்கு 5 நாட்கள் அல்லது வாரத்துக்கு ஒரு நாள் குடிநீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை ஊர் மக்கள் வீட்டுக்கு நான்கு குடங்கள் என பகிர்ந்து பிடித்துக் கொள்கின்றனர். அதனால் இடையே தனியார் டிராக்டர், லாரிகளில் விற்கப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.6 கொடுத்து வாங்குகின்றனர். அது உவர்ப்பு நீராக உள்ளது. அதனால் 2 கிராம மக்களும் குடிநீருக்காக கஷ்டப்படும் நிலை உள்ளது.
இக்கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் கூறியதாவது: காவிரி கூட்டுக் குடிநீர் கொண்டு வந்த காலத்தில் இருந்தே எங்கள் கிராமத்துக்கு தெருக் குழாய்களில் குடிநீர் வரவில்லை.
நீர் ஆதாரம் ஏற்படுத்தவில்லை: போதிய குடிநீர் ஆதாரம் இல்லாததால் தெருக் குழாய்களில் குடிநீர் வழங்கவில்லை என்கின்றனர். அதனால் மேல்நிலைத் தொட்டி அருகிலேயே குழாய்கள் அமைத்து குடிநீர் பிடித்து வருகிறோம். வாரத்துக்கு ஒரு வீட்டுக்கு 4 குடம் மட்டும் குடிநீர் வழங்குவது பற்றாக்குறையாக உள்ளது. மீதி தேவைகளுக்கு ஊருணித் தண்ணீரை பயன்படுத்துகிறோம். ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேறு நீர் ஆதாரங்களும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே தெருக்களில் குழாய்கள் மூலம் அனைவருக்கும் போதிய குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.