உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விவசாயத் துறைக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகளைப் போதியளவு பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான தேசிய பேரவையின் உப குழு கலந்துரையாடல்
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விவசாயத் துறைக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகளைப் போதியளவு பெற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு (25) கலந்துரையாடியது.
கமநலத் திணைக்களத்தினால் விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டு அந்தந்த இடத்துக்குப் பயன்படுத்த வேண்டிய உரங்கள் குறித்து விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்பட வேண்டும் என பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்தார்.
நெல் விவசாயிகளுக்குத் தேவையான உரம் இறக்குமதி செய்யப்பட்டு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதாக கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் உபகுழுவில் தெரிவித்தனர். எனினும், உரத்தின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், பயிர்களுக்கான விதைகளின் உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிப்பது குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம், வனவிலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடல்களின் மூலம் வெளிவரும் விடயங்கள் ஊடாக உரம் மற்றும் விதைகள் தொடர்பான பல முக்கிய பரிந்துரைகள் முன்வைக்க எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கமத்தொழில் அமைச்சின் அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதிநிதிகள், உர கம்பனிகளின் பிரதிநிதிகள், விவசாயத் துறையுடன் தொடர்புபட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், விவசாயப் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ எம்.ரமேஸ்வரன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.