எல்லாம் பொய்… மெஸ்ஸியை வீழ்த்திய சவுதி வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசா? அல் ஷெஹ்ரி பளீர்!

கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் 22வது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியன்களை கத்துக்கட்டிகள் வீழ்த்தியது பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதில் குறிப்பிடத்தக்கது லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா. குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த அணி தனது முதல் போட்டியில் சவுதி அரேபியா உடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் கோல் முதல் பாதியில் கச்சிதமாக வந்து சேர்ந்தது.

இதை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் இரண்டாவது பாதியில் இரண்டு கோல்கள் அடித்து முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியது சவுதி அரேபியா. இது கால்பந்து உலகில் பேசுபொருளாக மாறியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதி மன்னர் தங்கள் நாட்டிற்கு ஒருநாள் விடுமுறை அறிவித்திருந்தார்.

குரூப் F: பெல்ஜியம் vs மொராக்கோ… லுகாகு இல்லாத செஞ்சேனை… குறிவச்சு அடிக்கும் சிங்கங்கள்!

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இந்த வெற்றியை பற்றியே பேசி வந்தனர். இந்நிலையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை தோற்கடித்த சவுதி அரேபிய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்க அந்நாட்டு அரசு முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. பொதுவான ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை 6 கோடி ரூபாயில் இருந்து 10 கோடி ரூபாய் வரை இருக்கும். இதை உலகப் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும்.

சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. மேலும் சவுதி அரேபிய வீரர்களின் சம்பளம் கூட இவ்வளவு இருக்காது. இத்தகைய சூழலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப் போகிறார்களா? என்ற ஆச்சரியம் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தீயாய் பரவத் தொடங்கியது. சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஊடகங்கள் கூட ரோல்ஸ் ராய்ஸ் செய்தியை பதிவிட்டு வந்தன.

ஆனால் இந்த தகவல் வெறும் வதந்தி என்று தெரியவந்திருக்கிறது. சமீபத்தில் சவுதி அரேபியா கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹெர்வி ரெனார்ட் மற்றும் அந்த அணியின் நட்சத்திர ஸ்டிரைக்கரும், அர்ஜென்டினா அணிக்கு எதிராக முதல் கோலை அடித்தவருமான அல் ஷெஹ்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, சவுதி வீரர்கள் அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் வழங்கப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளன.

FIFA World Cup 2022 கனவு… மெஸ்ஸிக்கு ஒரேவொரு சான்ஸ்… சாதிக்குமா அர்ஜென்டினா?

அது உண்மையா? அப்படி கிடைத்தால் நீங்கள் என்ன கலரை தேர்வு செய்வீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, இந்த தகவல் உண்மையல்ல. நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் விளையாடவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். எங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதுதான் எங்களுக்கு கிடைத்த பரிசு மற்றும் சாதனை என்று குறிப்பிட்டார்.

இதை செய்தியாளர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆச்சரியத்துடன் தான் பார்த்து வருகின்றனர். அப்படியெனில் யாரோ வதந்தியை பற்ற வைத்துவிட்டு ரோல்ஸ் ராய்ஸ் என பரப்பி விட்டிருப்பது தெரியவருகிறது. அர்ஜென்டினா அணிக்கு எதிரான சவுதி அரேபியாவின் வெற்றி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியவை. சிறப்பாக விளையாடிய அணிக்கு கிடைத்த தரமான வெற்றி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த வெற்றி கால்பந்து உலகை ஆசியாவை நோக்கி திருப்பியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.